Pages

Saturday, March 28, 2020

Mahalingeswarar Temple, Thiruvidaimarudur – Sambandar Hymns

Mahalingeswarar Temple, Thiruvidaimarudur – Sambandar Hymns
01.032:
ஓடேகலன் உண்பதும் ஊரிடு பிச்சை
காடேயிட மாவது கல்லால் நிழற்கீழ்
வாடாமுலை மங்கையுந் தானும் மகிழ்ந்து
ஈடாவுறை கின்ற இடைமரு தீதோ.  1
தடங்கொண்டதொர் தாமரைப் பொன்முடி தன்மேல்
குடங்கொண்டடி யார்குளிர் நீர்சுமந் தாட்டப்
படங்கொண்டதொர் பாம்பரை யார்த்த பரமன்
இடங்கொண்டிருந் தான்றன் இடைமரு தீதோ.  2
வெண்கோவணங் கொண்டொரு வெண்டலை யேந்தி
அங்கோல்வளை யாளையொர் பாகம் அமர்ந்து
பொங்காவரு காவிரிக் கோலக் கரைமேல்
எங்கோனுறை கின்ற இடைமரு தீதோ.  3
அந்தம்மறி யாத அருங்கல முந்திக்
கந்தங்கமழ் காவிரிக் கோலக் கரைமேல்
வெந்தபொடிப் பூசிய வேத முதல்வன்
எந்தையுறை கின்ற இடைமரு தீதோ.  4
வாசங்கமழ் மாமலர்ச் சோலையில் வண்டே
தேசம்புகுந் தீண்டியொர் செம்மை யுடைத்தாய்ப்
பூசம்புகுந் தாடிப் பொலிந்தழ காய
ஈசன்உறை கின்ற இடைமரு தீதோ.  5
வன்புற்றிள நாகம் அசைத்தழ காக
என்பிற்பல மாலையும் பூண்டெரு தேறி
அன்பிற்பிரி யாதவ ளோடும் உடனாய்
இன்புற்றிருந் தான்றன் இடைமரு தீதோ.  6
தேக்குந்திமி லும்பல வுஞ்சுமந் துந்திப்
போக்கிப்புறம் பூச லடிப்ப வருமால்
ஆர்க்குந்திரைக் காவிரிக் கோலக் கரைமேல்
ஏற்கஇருந் தான்றன் இடைமரு தீதோ.  7
பூவார்குழ லார்அகில் கொண்டு புகைப்ப
ஓவாதடி யாரடியுள்1 குளிர்ந் தேத்த
ஆவா அரக் கன்றனை ஆற்ற லழித்த
ஏவார்சிலை யான்றன் இடைமரு தீதோ.
பாடம் : 1யாரடிகள்  8
முற்றாததொர் பால்மதி சூடு முதல்வன்
நற்றாமரை யானொடு மால்நயந் தேத்தப்
பொற்றோளியுந் தானும் பொலிந்தழ காக
எற்றேயுறை கின்ற இடைமரு தீதோ.  9
சிறுதேரரும் சில்சம ணும்புறங் கூற
நெறியேபல பத்தர்கள் கைதொழு தேத்த
வெறியாவரு காவிரிக் கோலக் கரைமேல்
எறியார்மழு வாளன் இடைமரு தீதோ.  10
கண்ணார்கமழ் காழியுள் ஞானசம் பந்தன்
எண்ணார்புக ழெந்தை யிடைமரு தின்மேல்
பண்ணோடிசை பாடிய பத்தும்வல் லார்கள்
விண்ணோருல கத்தினில் வீற்றிருப் பாரே.  11
01.095:
தோடொர் காதினன், பாடும் மறையினன்
காடு பேணிநின், றாடும் மருதனே.  1
கருதார் புரமெய்வர், எருதே இனிதூர்வர்
மருதே யிடமாகும், விருதாம் வினைதீர்ப்பே.  2
எண்ணும் அடியார்கள், அண்ணல் மருதரைப்
பண்ணின் மொழிசொல்ல, விண்ணுந் தமதாமே.  3
விரியார் சடைமேனி, எரியார் மருதரைத்
தரியா தேத்துவார், பெரியா ருலகிலே.  4
பந்த விடையேறும், எந்தை மருதரைச்
சிந்தை செய்பவர், புந்தி நல்லரே.  5
கழலுஞ் சிலம்பார்க்கும், எழிலார் மருதரைத்
தொழலே பேணுவார்க், குழலும் வினைபோமே.  6
பிறையார் சடையண்ணல், மறையார் மருதரை
நிறையால் நினைபவர், குறையா ரின்பமே.  7
எடுத்தான் புயந்தன்னை, அடுத்தார் மருதரைத்
தொடுத்தார் மலர்சூட்ட, விடுத்தார் வேட்கையே.  8
இருவர்க் கெரியாய, உருவ மருதரைப்
பரவி யேத்துவார், மருவி வாழ்வரே.  9
நின்றுண் சமண்தேரர், என்று மருதரை
அன்றி யுரைசொல்ல, நன்று மொழியாரே.  10


கருது சம்பந்தன், மருத ரடிபாடிப்
பெரிதுந் தமிழ்சொல்லப், பொருத வினைபோமே.  11
01.110:
மருந்தவன் வானவர் தானவர்க்கும்
பெருந்தகை பிறவினொ டிறவுமானான்
அருந்தவ முனிவரொ டால்நிழற்கீழ்
இருந்தவன் வளநகர் இடைமருதே.  1
தோற்றவன் கேடவன் துணைமுலையாள்
கூற்றவன் கொல்புலித் தோலசைத்த
நீற்றவன் நிறைபுனல் நீள்சடைமேல்
ஏற்றவன் வளநகர் இடைமருதே.  2
படையுடை மழுவினன் பால்வெண்ணீற்றன்
நடைநவில் ஏற்றினன் ஞாலமெல்லாம்
முடைதலை இடுபலி கொண்டுழல்வான்
இடைமரு தினிதுறை யெம்மிறையே.  3
பணைமுலை உமையொரு பங்கனொன்னார்
துணைமதில் மூன்றையுஞ் சுடரில்மூழ்கக்
கணைதுரந் தடுதிறற் காலற்செற்ற
இணையிலி வளநகர் இடைமருதே.  4
பொழிலவன் புயலவன் புயலியக்குந்
தொழிலவன் துயரவன் துயரகற்றுங்
கழலவன் கரியுரி போர்த்துகந்த
எழிலவன் வளநகர் இடைமருதே.  5
நிறையவன் புனலொடு மதியும்வைத்த
பொறையவன் புகழவன் புகழநின்ற
மறையவன் மறிகடல் நஞ்சையுண்ட
இறையவன் வளநகர் இடைமருதே.  6
நனிவளர் மதியொடு நாகம்வைத்த
பனிமலர்க் கொன்றையம் படர்சடையன்
முனிவரொ டமரர்கள் முறைவணங்க
இனிதுறை வளநகர் இடைமருதே.  7
தருக்கின அரக்கன தாளுந்தோளும்
நெரித்தவன் நெடுங்கைமா மதகரியன்
றுரித்தவன் ஒன்னலர் புரங்கள்மூன்றும்
எரித்தவன் வளநகர் இடைமருதே.  8
பெரியவன் பெண்ணினொ டாணுமானான்
வரியர வணைமறி கடற்றுயின்ற
கரியவன் அலரவன் காண்பரிய
எரியவன் வளநகர் இடைமருதே.  9
சிந்தையில் சமணொடு தேரர்சொன்ன
புந்தியில் உரையவை பொருள்கொளாதே
அந்தணர் (*)ஓத்தினொ டரவமோவா
எந்தைதன் வளநகர் இடைமருதே.
(*) ஓத்து என்பது வேதம்.  10
இலைமலி பொழிலிடை மருதிறையை
நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன
பலமிகு தமிழிவை பத்தும்வல்லார்
உலகுறு புகழினொ டோ ங்குவரே.  11
01.121:
நடைமரு திரிபுரம் எரியுண நகைசெய்த
படைமரு தழலெழ மழுவல பகவன்
புடைமரு திளமுகில் வளமமர் பொதுளிய
இடைமரு தடையநம் இடர்கெடல் எளிதே.  1
மழைநுழை மதியமொ டழிதலை மடமஞ்ஞை
கழைநுழை புனல்பெய்த கமழ்சடை முடியன்
குழைநுழை திகழ்செவி அழகொடு மிளிர்வதொர்
இழைநுழை புரியணல் இடமிடை மருதே.  2
அருமையன் எளிமையன் அழல்விட மிடறினன்
கருமையின் ஒளிபெறு கமழ்சடை முடியன்
பெருமையன் சிறுமையன் பிணைபெணொ டொருமையின்
இருமையும் உடையணல் இடமிடை மருதே.  3
பொரிபடு முதுகுற முளிகளி புடைபுல்கு
நரிவளர் சுடலையுள் நடமென நவில்வோன்
வரிவளர் குளிர்மதி யொளிபெற மிளிர்வதொர்
எரிவளர் சடையணல் இடமிடை மருதே.  4
வருநல மயிலன மடநடை மலைமகள்
பெருநல முலையிணை பிணைசெய்த பெருமான்
செருநல மதிலெய்த சிவனுறை செழுநகர்
இருநல புகழ்மல்கும் இடமிடை மருதே.  5
கலையுடை விரிதுகில் கமழ்குழல் அகில்புகை
மலையுடை மடமகள் தனையிடம் உடையோன்
விலையுடை அணிகலன் இலனென மழுவினொ
டிலையுடை படையவன் இடமிடை மருதே.  6
வளமென வளர்வன வரிமுரல் பறவைகள்
இளமணல் அணைகரை யிசைசெயும் இடைமரு
துளமென நினைபவர் ஒலிகழல் இணையடி
குளமண லுறமூழ்கி வழிபடல் குணமே.  7
மறையவன் உலகவன் மதியவன் மதிபுல்கு
துறையவன் எனவல அடியவர் துயரிலர்
கறையவன் மிடறது கனல்செய்த கமழ்சடை
இறையவன் உறைதரும் இடமிடை மருதே.  8
மருதிடை நடவிய மணிவணர் பிரமரும்
இருதுடை யகலமொ டிகலின ரினதெனக்
கருதிடல் அரியதொர் உருவொடு பெரியதொர்
எருதுடை யடிகள்தம் இடமிடை மருதே.  9
துவருறு விரிதுகில் உடையரும் அமணரும்
அவருறு சிறுசொலை நயவன்மின் இடுமணல்
கவருறு புனலிடை மருதுகை தொழுதெழும்
அவருறு வினைகெடல் அணுகுதல் குணமே.  10
தடமலி புகலியர் தமிழ்கெழு விரகினன்
இடமலி பொழிலிடை மருதினை யிசைசெய்த
படமலி தமிழிவை பரவவல் லவர்வினை
கெடமலி புகழொடு கிளரொளி யினரே.  11
01.122:
விரிதரு புலியுரி விரவிய அரையினர்
திரிதரும் எயிலவை புனைகணை யினிலெய்த
எரிதரு சடையினர் இடைமரு தடைவுனல்
புரிதரு மன்னவர் புகழ்மிக வுளதே.  1
மறிதிரை படுகடல் விடமடை மிடறினர்
எறிதிரை கரைபொரும் இடைமரு தெனுமவர்
செறிதிரை நரையொடு செலவிலர் உலகினில்
பிறிதிரை பெறுமுடல் பெருகுவ தரிதே.  2
சலசல சொரிபுனல் சடையினர் மலைமகள்
நிலவிய உடலினர் நிறைமறை மொழியினர்
இலரென இடுபலி யவரிடை மருதினை
வலமிட வுடல்நலி விலதுள வினையே.  3
விடையினர் வெளியதொர் தலைகல னெனநனி
கடைகடை தொறுபலி யிடுகென முடுகுவர்
இடைவிட லரியவர் இடைமரு தெனும்நகர்
உடையவர் அடியிணை தொழுவதெம் உயர்வே.  4
உரையரும் உருவினர் உணர்வரு வகையினர்
அரைபொரு புலியதள் உடையினர் அதன்மிசை
இரைமரும் அரவினர் இடைமரு தெனவுளம்
உரைகள துடையவர் புகழ்மிக வுளதே.  5
ஒழுகிய புனல்மதி யரவமொ டுறைதரும்
அழகிய முடியுடை அடிகள தறைகழல்
எழிலினர் உறையிடை மருதினை மலர்கொடு
தொழுதல்செய் தெழுமவர் துயருறல் இலரே.  6
கலைமலி விரலினர் கடியதொர் மழுவொடும்
நிலையினர் சலமகள் உலவிய சடையினர்
மலைமகள் முலையிணை மருவிய வடிவினர்
இலைமலி படையவர் இடமிடை மருதே.  7
செருவடை யிலவல செயல்செயத் திறலொடும்
அருவரை யினிலொரு பதுமுடி நெரிதர
இருவகை விரனிறி யவரிடைமருதது
பரவுவர் அருவினை ஒருவுதல் பெரிதே.  8
அரியொடு மலரவன் எனவிவ ரடிமுடி
தெரிவகை அரியவர் திருவடி தொழுதெழ
எரிதரும் உருவர்தம் இடைமரு தடைவுறல்
புரிதரும் மன்னவர் புகழ்மிக உளதே.  9


குடைமயி லினதழை மருவிய வுருவினர்
உடைமரு துவரினர் பலசொல வுறவிலை
அடைமரு திருவினர் தொழுதெழு கழலவர்
இடைமரு தெனமனம் நினைவதும் எழிலே.  10
பொருகடல் அடைதரு புகலியர் தமிழொடு
விரகினன் விரிதரு பொழிலிடைமருதினைப்
பரவிய ஒருபது பயிலவல் லவரிடர்
விரவிலர் வினையொடு வியனுல குறவே.  11
02.056:
பொங்குநூல் மார்பினீர்
பூதப்படையீர் பூங்கங்கை
தங்குசெஞ் சடையினீர்
சாமவேதம் ஓதினீர்
எங்குமெழிலார் மறையோர்கள்
முறையாலேத்த இடைமருதில்
மங்குல்தோய் கோயிலே
கோயிலாக மகிழ்ந்தீரே.  1
நீரார்ந்த செஞ்சடையீர்
நெற்றித்திருக்கண் நிகழ்வித்தீர்
போரார்ந்த வெண்மழுவொன்
றுடையீர் பூதம்பாடலீர்
ஏரார்ந்த மேகலையாள்
பாகங்கொண்டீர் இடைமருதில்
சீரார்ந்த கோயிலே
கோயிலாகச் சேர்ந்தீரே  2
அழல்மல்கும் அங்கையி
லேந்திப்பூதம் அவைபாடச்
சுழல்மல்கும் ஆடலீர்
சுடுகாடல்லாற் கருதாதீர்
எழில்மல்கு நான்மறையோர்
முறையாலேத்த இடைமருதில்
பொழில்மல்கு கோயிலே
கோயிலாகப் பொலிந்தீரே  3
பொல்லாப் படுதலையொன்
றேந்திப்புறங் காட்டாடலீர்
வில்லாற் புரமூன்றும்
எரித்தீர்விடை யார்கொடியினீர்
எல்லாக் கணங்களும்
முறையாலேத்த இடைமருதில்
செல்வாய கோயிலே
கோயிலாகச் சேர்ந்தீரே.  4
வருந்திய மாதவத்தோர்
வானோரேனோர் வந்தீண்டிப்
பொருந்திய தைப்பூச
மாடியுலகம் பொலிவெய்தத்
திருந்திய நான்மறையோர்
சீராலேத்த இடைமருதில்
பொருந்திய கோயிலே
கோயிலாகப் புக்கீரே.  5
சலமல்கு செஞ்சடையீர்
சாந்தநீறு பூசினீர்
வலமல்கு வெண்மழுவொன்
றேந்திமயானத் தாடலீர்
இலமல்கு நான்மறையோ
ரினிதாயேத்த இடைமருதில்
புலமல்கு கோயிலே
கோயிலாகப் பொலிந்தீரே  6
புனமல்கு கொன்றையீர்
புலியின்அதளீர் பொலிவார்ந்த
சினமல்கு மால்விடையீர்
செய்யீர்கரிய கண்டத்தீர்
இனமல்கு நான்மறையோ
ரேத்துஞ்சீர்கொள் இடைமருதில்
கனமல்கு கோயிலே
கோயிலாகக் கலந்தீரே.  7
சிலையுய்த்த வெங்கணையாற்
புரமூன்றெரித்தீர் திறலரக்கன்
தலைபத்துந் திண்தோளும்
நெரித்தீர்தையல் பாகத்தீர்
இலைமொய்த்த தண்பொழிலும்
வயலுஞ்சூழ்ந்த இடைமருதில்
நலமொய்த்த கோயிலே
கோயிலாக நயந்தீரே  8
மறைமல்கு நான்முகனும்
மாலும்அறியா வண்ணத்தீர்
கறைமல்கு கண்டத்தீர்
கபாலமேந்து கையினீர்
அறைமல்கு வண்டினங்கள்
ஆலுஞ்சோலை இடைமருதில்
நிறைமல்கு கோயிலே
கோயிலாக நிகழ்ந்தீரே  9
சின்போர்வைச் சாக்கியரும்
மாசுசேருஞ் சமணரும்
துன்பாய கட்டுரைகள்
சொல்லியல்லல் தூற்றவே
இன்பாய அந்தணர்கள்
ஏத்தும்ஏர்கொள் இடைமருதில்
அன்பாய கோயிலே
கோயிலாக அமர்ந்தீரே  10
கல்லின் மணிமாடக்
கழுமலத்தார் காவலவன்
நல்ல அருமறையான்
நற்றமிழ்ஞான சம்பந்தன்
எல்லி இடைமருதில்
ஏத்துபாட லிவைபத்துஞ்
சொல்லு வார்க்குங்
கேட்பார்க்குந் துயரமில்லையே  11