Pages

Wednesday, September 22, 2021

Amirtha Kadeswarar Temple, Thirukadaiyur – Sundarar Hymns

Amirtha Kadeswarar Temple, Thirukadaiyur – Sundarar Hymns

07.028:

பொடியார் மேனியனே

புரிநூலொரு பாற்பொருந்த

வடியார் மூவிலைவேல்

வளர்கங்கையின் மங்கையொடுங்

கடியார் கொன்றையனே

கடவூர்தனுள் வீரட்டத்தெம்

அடிகேள் என்னமுதே

எனக்கார்துணை நீயலதே.  1

பிறையா ருஞ்சடையாய்

பிரமன்றலை யிற்பலிகொள்

மறையார் வானவனே

மறையின்பொரு ளானவனே

கறையா ரும்மிடற்றாய்

கடவூர்தனுள் வீரட்டத்தெம்

இறைவா என்னமுதே

எனக்கார்துணை நீயலதே.  2

அன்றா லின்னிழற்கீழ்

அறம்நால்வர்க் கருள்புரிந்து

கொன்றாய் காலனுயிர்

கொடுத்தாய்மறை யோனுக்குமான்

கன்றாருங் கரவா

கடவூர்த்திரு வீரட்டத்துள்

என்றா தைபெருமான்

எனக்கார்துணை நீயலதே.  3

போரா ருங்கரியின்

னுரிபோர்த்துப்பொன் மேனியின்மேல்

வாரா ரும்முலையாள்

ஒருபாகம் மகிழ்ந்தவனே

காரா ரும்மிடற்றாய்

கடவூர்தனுள் வீரட்டானத்

தாரா என்னமுதே

எனக்கார்துணை நீயலதே.  4

மையார் கண்டத்தினாய்

மதமாவுரி போர்த்தவனே

பொய்யா தென்னுயிருள்

புகுந்தாயின்னம் போந்தறியாய்

கையார் ஆடரவா

கடவூர்தனுள் வீரட்டத்தெம்

ஐயா என்னமுதே

எனக்கார்துணை நீயலதே.  5

மண்ணீர் தீவெளிகால்

வருபூதங்க ளாகிமற்றும்

பெண்ணோ டாணலியாய்ப்

பிறவாவுரு ஆனவனே

கண்ணா ரும்மணியே

கடவூர்தனுள் வீரட்டத்தெம்

அண்ணா என்னமுதே

எனக்கார்துணை நீயலதே.  6

எரியார் புன்சடைமேல்

இளநாகம் அணிந்தவனே

நரியா ருஞ்சுடலை

நகுவெண்டலை கொண்டவனே

கரியார் ஈருரியாய்

கடவூர்தனுள் வீரட்டத்தெம்

அரியாய் என்னமுதே

எனக்கார்துணை நீயலதே.  7

வேறா உன்னடியேன்

விளங்குங்குழைக் காதுடையாய்

தேறேன் உன்னையல்லாற்

சிவனேயென் செழுஞ்சுடரே

காறார் வெண்மருப்பா

கடவூர்த்திரு வீரட்டத்துள்

ஆறார் செஞ்சடையாய்

எனக்கார்துணை நீயலதே.  8

அயனோ டன்றரியும்

அடியும்முடி காண்பரிய

பயனே எம்பரனே

பரமாய பரஞ்சுடரே

கயமா ருஞ்சடையாய்

கடவூர்த்திரு வீரட்டத்துள்

அயனே என்னமுதே

எனக்கார்துணை நீயலதே.  9

காரா ரும்பொழில்சூழ்

கடவூர்த்திரு வீரட்டத்துள்

ஏரா ரும்மிறையைத்

துணையாஎழில் நாவலர்கோன்

ஆரூ ரன்னடியான்

அடித்தொண்டன் உரைத்ததமிழ்

பாரோ ரேத்தவல்லார்

பரலோகத் திருப்பாரே.