Pages

Thursday, October 21, 2021

Siddhanatheswarar Temple, Thirunaraiyur – Sambandar Hymns

Siddhanatheswarar Temple, Thirunaraiyur – Sambandar Hymns

01.029:

ஊரு லாவு பலிகொண் டுலகேத்த

நீரு லாவு நிமிர்புன் சடையண்ணல்

சீரு லாவு மறையோர் நறையூரில்

சேருஞ் சித்தீச் சரஞ்சென் றடைநெஞ்சே.  1

காடு நாடுங் கலக்கப் பலிநண்ணி

ஓடு கங்கை யொளிர்புன் சடைதாழ

வீடு மாக மறையோர் நறையூரில்

நீடுஞ் சித்தீச் சரமே நினைநெஞ்சே.  2

கல்வி யாளா கனகம் அழல்மேனி

புல்கு கங்கை புரிபுன் சடையானூர்

மல்கு திங்கள் பொழில்சூழ் நறையூரில்

செல்வர் சித்தீச் சரஞ்சென் றடைநெஞ்சே.  3

நீட வல்ல நிமிர்புன் சடைதாழ

ஆட வல்ல அடிக ளிடமாகும்

பாடல் வண்டு பயிலும் நறையூரில்

சேடர் சித்தீச் சரமே தெளிநெஞ்சே.  4

உம்ப ராலும் உலகின் னவராலும்

தம்பெ ருமைய ளத்தற் கரியானூர்

நண்பு லாவு மறையோர் நறையூரில்

செம்பொன் சித்தீச் சரமே தெளிநெஞ்சே.  5

கூரு லாவு படையான் விடையேறி

போரு லாவு மழுவான் அனலாடி

பேரு லாவு பெருமான் நறையூரில்

சேருஞ் சித்தீச் சரமே யிடமாமே.  6

அன்றி நின்ற அவுணர் புரமெய்த

வென்றி வில்லி விமலன் விரும்புமூர்

மன்றில் வாசம் மணமார் நறையூரில்

சென்று சித்தீச் சரமே தெளிநெஞ்சே.  7

அரக்கன் ஆண்மை அழிய வரைதன்னால்

நெருக்க வூன்றும் விரலான் விரும்புமூர்

பரக்குங் கீர்த்தி யுடையார் நறையூரில்

திருக்கொள் சித்தீச் சரமே தெளிநெஞ்சே.  8

ஆழி யானும் அலரின் உறைவானும்

ஊழி நாடி உணரார் திரிந்துமேல்

சூழு நேட எரியாம் ஒருவன்சீர்

நீழல் சித்தீச் சரமே நினைநெஞ்சே.  9

மெய்யின் மாசர் விரிநுண் துகிலிலார்

கையி லுண்டு கழறும் உரைகொள்ளேல்

உய்ய வேண்டில் இறைவன் நறையூரில்

செய்யுஞ் சித்தீச் சரமே தவமாமே.  10

மெய்த்து லாவு மறையோர் நறையூரில்

சித்தன் சித்தீச் சரத்தை உயர்காழி

அத்தன் பாதம் அணிஞான சம்பந்தன்

பத்தும் பாடப் பறையும் பாவமே.

01.071:

பிறைகொள் சடையர் புலியி னுரியர்

பேழ்வாய் நாகத்தர்

கறைகொள் கண்டர் கபால

மேந்துங் கையர் கங்காளர்

மறைகொள் கீதம் பாடச்

சேடர் மனையில் மகிழ்வெய்திச்

சிறைகொள் வண்டு தேனார்

நறையூர்ச் சித்தீச் சரத்தாரே.  1

பொங்கார் சடையர் புனலர்

அனலர் பூதம் பாடவே

தங்கா தலியுந் தாமும்

உடனாய்த் தனியோர் விடையேறிக்

கொங்கார் கொன்றை வன்னி

மத்தஞ் சூடிக் குளிர்பொய்கைச்

செங்கால் அனமும் பெடையுஞ்

சேருஞ் சித்தீச் சரத்தாரே.  2

முடிகொள் சடையர் முளைவெண்

மதியர் மூவாமேனிமேல்

பொடிகொள் நூலர் புலியி

னதளர் புரிபுன் சடைதாழக்

கடிகொள் சோலை வயல்சூழ்

மடுவிற் கயலா ரினம்பாயக்

கொடிகொள் மாடக் குழாமார்

நறையூர்ச் சித்தீச் சரத்தாரே.  3

பின்தாழ் சடைமேல் நகுவெண்

டலையர் பிரமன் தலையேந்தி

மின்தா ழுருவிற் சங்கார்

குழைதான் மிளிரும் ஒருகாதர்

பொன்தாழ் கொன்றை செருந்தி

புன்னை பொருந்து செண்பகம்

சென்றார் செல்வத் திருவார்

நறையூர்ச் சித்தீச் சரத்தாரே.  4

நீரார் முடியர் கறைகொள்

கண்டர் மறைகள் நிறைநாவர்

பாரார் புகழால் பத்தர்

சித்தர் பாடி யாடவே

தேரார் வீதி முழவார்

விழவின் ஒலியுந் திசைசெல்லச்

சீரார் கோலம் பொலியும்

நறையூர்ச் சித்தீச் சரத்தாரே.  5

நீண்ட சடையர் நிரைகொள்

கொன்றை விரைகொள் மலர்மாலை

தூண்டு சுடர்பொன் னொளிகொள்

மேனிப் பவளத் தெழிலார்வந்

தீண்டு மாடம் எழிலார்

சோலை யிலங்கு கோபுரம்

தீண்டு மதியந் திகழும்

நறையூர்ச் சித்தீச் சரத்தாரே.  6

குழலார் சடையர் கொக்கின்

இறகர் கோல நிறமத்தம்

தழலார் மேனித் தவள

நீற்றர் சரிகோவ ணக்கீளர்

எழிலார் நாகம் புலியின்

உடைமேல் இசைத்து1 விடையேறிக்

கழலார் சிலம்பு புலம்ப

வருவார் சித்தீச் சரத்தாரே. 7

கரையார் கடல்சூழ் இலங்கை

மன்னன் கயிலை மலைதன்னை

வரையார் தோளா லெடுக்க

முடிகள் நெரித்து மனமொன்றி

உரையார் கீதம் பாட

நல்ல வுலப்பி லருள்செய்தார்

திரையார் புனல்சூழ் செல்வ

நறையூர்ச் சித்தீச் சரத்தாரே.  8

நெடியான் பிரமன் நேடிக்

காணார் நினைப்பார் மனத்தாராய்

அடியா ரவரும் அருமா

மறையும் அண்டத் தமரரும்

முடியால் வணங்கிக் குணங்க

ளேத்தி முதல்வா வருளென்னச்

செடியார் செந்நெல் திகழும்

நறையூர்ச் சித்தீச் சரத்தாரே.  9

நின்றுண் சமணர் இருந்துண்

தேரர் நீண்ட போர்வையார்

ஒன்று முணரா ஊமர்

வாயில் உரைகேட் டுழல்வீர்காள்

கன்றுண்பயப்பா லுண்ண முலையில்

கபால மயல்பொழியச்2

சென்றுண் டார்ந்து சேரும்

நறையூர்ச் சித்தீச் சரத்தாரே.10

குயிலார் கோல மாத

விகள் குளிர்பூஞ் சுரபுன்னை

செயிலார் பொய்கை சேரும்

நறையூர்ச் சித்தீச் சரத்தாரை

மயிலார் சோலை சூழ்ந்த

காழி மல்கு சம்பந்தன்

பயில்வார்க் கினிய பாடல்

வல்லார் பாவ நாசமே.  11

02.087:

நேரிய னாகுமல்ல னொருபாலு மேனி

யரியான்மு னாய வொளியான்

நீரியல் காலுமாகி நிறைவானு மாகி

யுறுதீயு மாய நிமலன்

ஊரியல் பிச்சைபேணி யுலகங்க ளேத்த

நல்குண்டு பண்டு சுடலை

நாரியொர் பாகமாக நடமாட வல்ல

நறையூரின் நம்ப னவனே. 1

இடமயி லன்னசாயல் மடமங்கை தன்கை

யெதிர்நாணி பூண வரையில்

கடும்அயி லம்புகோத்து எயில் செற்றுகந்து

அமரர்க் களித்த தலைவன்

மடமயில் ஊர்திதாதை எனநின்று தொண்டர்

மனநின்ற மைந்தன் மருவும்

நடமயி லாலநீடு குயில்கூவு சோலை

நறையூரின் நம்ப னவனே.  2

சூடக முன்கைமங்கை யொருபாக மாக

அருள்கார ணங்கள் வருவான்

ஈடக மானநோக்கி யிடுபிச்சை கொண்டு

படுபிச்ச னென்று பரவத்

தோடக மாயொர்காதும் ஒருகா திலங்கு

குழைதாழ வேழ வுரியன்

நாடக மாகவாடி மடவார்கள் பாடும்

நறையூரின் நம்ப னவனே.  3

சாயல்நன் மாதொர்பாகன் விதியாய சோதி

கதியாக நின்ற கடவுள்

ஆயக மென்னுள்வந்த அருளாய செல்வன்

இருளாய கண்டன் அவனித்

தாயென நின்றுகந்த தலைவன் விரும்பு

மலையின்கண் வந்து தொழுவார்

நாயக னென்றிறைஞ்சி மறையோர்கள் பேணும்

நறையூரின் நம்ப னவனே.

நெதிபடு மெய்யெம்ஐயன்நிறைசோலை சுற்றி

நிகழம் பலத்தின் நடுவே

அதிர்பட ஆடவல்ல அமரர்க் கொருத்தன்

எமர்சுற்ற மாய இறைவன்

மதிபடு சென்னிமன்னு சடைதாழ வந்து

விடையேறி இல்பலி கொள்வான்

நதிபட வுந்திவந்து வயல்வாளை பாயும்

நறையூரின் நம்ப னவனே. 5

கணிகையொர் சென்னிமன்னு மதுவன்னி கொன்றை

மலர்துன்று செஞ்ச டையினான்

பணிகையின் முன்னிலங்க வருவேட மன்னு

பலவாகி நின்ற பரமன்

அணுகிய வேதவோசை யகலங்கம் ஆறின்

பொருளான ஆதி யருளான்

நணுகிய தொண்டர்கூடி மலர்தூவி யேத்து

நறையூரின் நம்ப னவனே.  6

ஒளிர்தரு கின்றமேனி யுருவெங்கு மங்க

மவையார ஆட லரவம்

மிளிர்தரு கையிலங்க அனலேந்தி யாடும்

விகிர்தன் விடங்கொள் மிடறன்

துளிதரு சோலையாலை தொழில்மேவ வேதம்

எழிலார வென்றி யருளும்

நளிர்மதி சேருமாடம் மடவார்க ளாரும்

நறையூரின் நம்ப னவனே.  7

அடலெரு தேறுகந்த அதிருங் கழற்கள்

எதிருஞ் சிலம்பொ டிசையக்

கடலிடை நஞ்சமுண்டு கனிவுற்ற கண்டன்

முனிவுற் றிலங்கை யரையன்

உடலொடு தோளனைத்து முடிபத் திறுத்தும்

இசைகேட் டிரங்கி யொருவாள்

நடலைகள் தீர்த்துநல்கி நமையாள வல்ல

நறையூரின் நம்ப னவனே.  8

குலமலர் மேவினானும் மிகுமாய னாலும்

எதிர்கூடி நேடி நினைவுற்

றிலபல எய்தொணாமை எரியா யுயர்ந்த

பெரியா னிலங்கு சடையன்

சிலபல தொண்டர் நின்று பெருமைக்கள் பேச

வருமைத் திகழ்ந்த பொழிலின்

நலமலர் சிந்தவாச மணநாறு வீதி

நறையூரின் நம்ப னவனே.  9

துவருறு கின்றஆடை யுடல்போர்த் துழன்ற

வவர் தாமும் அல்ல சமணும்

கவருறு சிந்தையாள ருரைநீத்து கந்த

பெருமான் பிறங்கு சடையன்

தவமலி பத்தர்சித்தர் மறையாளர் பேண

முறைமாதர் பாடி மருவும்

நவமணி துன்றுகோயில் ஒளிபொன்செய் மாட

நறையூரின் நம்ப னவனே.  10

கானலு லாவியோதம் எதிர்மல்கு காழி

மிகுபந்தன் முந்தி யுணர

ஞானமு லாவுசிந்தை யடிவைத் துகந்த

நறையூரின் நம்ப னவனை

ஈனமி லாதவண்ணம் இசையா லுரைத்த

தமிழ்மாலை பத்தும் நினைவார்

வானநி லாவவல்லர் நிலமெங்கு நின்று

வழிபாடு செய்யு மிகவே.  11