Agnipureeswarar Temple,
Thirupugalur – Sundarar Hymns
The temple has been praised by the three Nayanmars
(Saint Poets) Appar, Thiru Gnana Sambanthar and Sundarar. The hymns
of Sundarar are given below;
07.034:
தம்மையேபுகழ்ந் திச்சைபேசினுஞ்
சார்வினுந்தொண்டர் தருகிலாப்
பொய்ம்மையாளரைப் பாடாதேயெந்தை
புகலூர்பாடுமின் புலவீர்காள்
இம்மையேதருஞ் சோறுங்கூறையும்
ஏத்தலாமிடர் கெடலுமாம்
அம்மையேசிவ லோகமாள்வதற்
கியாதுமையுற வில்லையே. 1
மிடுக்கிலாதானை வீமனேவிறல்
விசயனேவில்லுக் கிவனென்று
கொடுக்கிலாதானைப் பாரியேயென்று
கூறினுங்கொடுப் பாரிலை
பொடிக்கொள்மேனியெம் புண்ணியன்புக
லூரைப்பாடுமின் புலவீர்காள்
அடுக்குமேலம ருலகமாள்வதற்
கியாதுமையுற வில்லையே. 2
காணியேற்பெரி துடையனேகற்று
நல்லனேசுற்றம் நற்கிளை
பேணியேவிருந் தோம்புமேயென்று
பேசினுங்கொடுப் பாரிலை
பூணிபூண்டுழப் புட்சிலம்புந்தண்
புகலூர்பாடுமின் புலவீர்காள்
ஆணியாயம ருலகமாள்வதற்
கியாதுமையுற வில்லையே. 3
நரைகள்போந்துமெய் தளர்ந்துமூத்துடல்
நடுங்கிநிற்குமிக் கிழவனை
வரைகள்போல்திரள் தோளனேயென்று
வாழ்த்தினுங்கொடுப் பாரிலை
புரைவெள்ளேறுடைப் புண்ணியன்புக
லூரைப்பாடுமின் புலவீர்காள்
அரையனாயம ருலகமாள்வதற்
கியாதுமையுற வில்லையே. 4
வஞ்சநெஞ்சனை மாசழக்கனைப்
பாவியைவழக் கில்லியைப்
பஞ்சதுட்டனைச் சாதுவேயென்று
பாடினுங்கொடுப் பாரிலை
பொன்செய்செஞ்சடைப் புண்ணியன்புக
லூரைப்பாடுமின் புலவீர்காள்
நெஞ்சில்நோயறுத் துஞ்சுபோவதற்
கியாதுமையுற வில்லையே. 5
நலமிலாதானை நல்லனேயென்று
நரைத்தமாந்தரை இளையனே
குலமிலாதானைக் குலவனேயென்று
கூறினுங்கொடுப் பாரிலை
புலமெலாம்வெறி கமழும்பூம்புக
லூரைப்பாடுமின் புலவீர்காள்
அலமராதமர் உலகமாள்வதற்
கியாதுமையுற வில்லையே. 6
நோயனைத்தடந் தோளனேயென்று
நொய்யமாந்தரை விழுமிய
தாயன்றோபுல வோர்க்கெலாமென்று
சாற்றினுங்கொடுப் பாரிலை
போயுழன்றுகண் குழியாதேயெந்தை
புகலூர்பாடுமின் புலவீர்காள்
ஆயமின்றிப்போய் அண்டமாள்வதற்
கியாதுமையுற வில்லையே. 7
எள்விழுந்திடம் பார்க்குமாகிலும்
ஈக்கும்ஈகிலன் ஆகிலும்
வள்ளலேயெங்கள் மைந்தனேயென்று
வாழ்த்தினுங்கொடுப் பாரிலை
புள்ளெலாஞ்சென்று சேரும்பூம்புக
லூரைப்பாடுமின் புலவீர்காள்
அள்ளற்பட்டழுந் தாதுபோவதற்
கியாதுமையுற வில்லையே. 8
கற்றிலாதானைக் கற்றுநல்லனே
காமதேவனை யொக்குமே
முற்றிலாதானை முற்றனேயென்று
மொழியினுங்கொடுப் பாரிலை
பொத்திலாந்தைகள் பாட்டறாப்புக
லூரைப்பாடுமின் புலவீர்காள்
அத்தனாயம ருலகமாள்வதற்
கியாதுமையுற வில்லையே. 9
தையலாருக்கோர் காமனேயென்றுஞ்
சாலநல்வழக் குடையனே
கையுலாவிய வேலனேயென்று
கழறினுங்கொடுப் பாரிலை
பொய்கையாவியின் மேதிபாய்புக
லூரைப்பாடுமின் புலவீர்காள்
ஐயனாயம ருலகமாள்வதற்
கியாதுமையுற வில்லையே. 10
செறுவினிற்செழுங் கமலமோங்குதென்
புகலூர்மேவிய செல்வனை
நறவம்பூம்பொழில் நாவலூரன்
வனப்பகையப்பன் சடையன்றன்
சிறுவன்வன்றொண்டன் ஊரன்பாடிய
பாடல்பத்திவை வல்லவர்
அறவனாரடி சென்றுசேர்வதற்
கியாதுமையுற வில்லையே. 11