Friday, September 29, 2023

Pushpavaneswarar Temple, Thirupuvanam – Sambandar Hymns

Pushpavaneswarar Temple, Thirupuvanam – Sambandar Hymns

01.064:

அறையார்புனலு மாமலரும்

ஆடர வார்சடைமேல்

குறையார்மதியஞ் சூடிமாதோர்

கூறுடை யானிடமாம்

முறையால்1 முடிசேர் தென்னர்சேரர்

சோழர்கள் தாம்வணங்கும்

திறையாரொளிசேர் செம்மையோங்குந்

தென்திருப் பூவணமே.

பாடம் : 1முறையார்  1

மருவார்மதில்மூன் றொன்றஎய்து

மாமலை யான்மடந்தை

ஒருபால்பாக மாகச்செய்த

வும்பர் பிரானவனூர்

கருவார்சாலி யாலைமல்கிக்

கழல்மன்னர் காத்தளித்த

திருவால்மலிந்த சேடர்வாழுந்

தென்திருப் பூவணமே.  2

போரார்மதமா உரிவைபோர்த்துப்

பொடியணி மேனியனாய்க்

காரார் கடலின் நஞ்சமுண்ட

கண்ணுதல் விண்ணவனூர்

பாரார் வைகைப் புனல்வாய்பரப்பிப்

பன்மணி பொன்கொழித்துச்

சீரார்வாரி சேரநின்ற

தென்திருப் பூவணமே.  3

கடியாரலங்கற் கொன்றைசூடிக்

காதிலொர் வார்குழையன்

கொடியார்வெள்ளை யேறுகந்த

கோவண வன்னிடமாம்

படியார்கூடி நீடியோங்கும்

பல்புக ழாற்பரவச்

செடியார்வைகை சூழநின்ற

தென்திருப் பூவணமே.  4

கூரார்வாளி சிலையிற்கோத்துக்

கொடிமதில் கூட்டழித்த

போரார்வில்லி மெல்லியலாளோர்

பால்மகிழ்ந் தானிடமாம்

ஆராவன்பில் தென்னர்சேரர்

சோழர்கள் போற்றிசைப்பத்

தேரார்வீதி மாடநீடுந்

தென்திருப் பூவணமே.  5

நன்றுதீதென் றொன்றிலாத

நான்மறை யோன்கழலே

சென்றுபேணி யேத்தநின்ற

தேவர் பிரானிடமாம்

குன்றிலொன்றி ஓங்கமல்கு

குளிர்பொழில் சூழ்மலர்மேல்

தென்றலொன்றி முன்றிலாருந்

தென்திருப் பூவணமே.  6

பைவாயரவம் அரையிற்சாத்திப்

பாரிடம் போற்றிசைப்ப

மெய்வாய்மேனி நீறுபூசி

ஏறுகந் தானிடமாம்

கைவாழ்வளையார்2 மைந்தரோடுங்

கலவியி னால்நெருங்கிச்

செய்வார்தொழிலின் பாடலோவாத்

தென்திருப் பூவணமே.

பாடம் : 2கைவாழ்வினையார்  7

மாடவீதி மன்னிலங்கை

மன்னனை மாண்பழித்துக்

கூடவென்றி வாள்கொடுத்தாள்

கொள்கையி னார்க்கிடமாம்

பாடலோடும் ஆடலோங்கிப்

பன்மணி பொன்கொழித்து

ஓடநீரால் வைகைசூழும்

உயர்திருப் பூவணமே.  8

பொய்யாவேத நாவினானும்

பூமகள் காதலனும்

கையால்தொழுது கழல்கள்போற்றக்

கனலெரி யானவனூர்

மையார்பொழிலின் வண்டுபாட

வைகை மணிகொழித்துச்

செய்யார்கமலம் தேன்அரும்புந்

தென்திருப் பூவணமே.  9

அலையார்புனலை நீத்தவருந்

தேரரும் அன்புசெய்யா

நிலையாவண்ணம் மாயம்வைத்த

நின்மலன் தன்னிடமாம்

மலைபோல்துன்னி வென்றியோங்கும்

மாளிகை சூழ்ந்தயலே

சிலையார்புரிசை பரிசுபண்ணுந்

தென்திருப் பூவணமே.  10

திண்ணார்புரிசை மாடமோங்குந்

தென்திருப் பூவணத்துப்

பெண்ணார்மேனி யெம்மிறையைப்

பேரியல் இன்தமிழால்

நண்ணாருட்கக் காழிமல்கு

ஞானசம் பந்தன்சொன்ன

பண்ணார்பாடல் பத்தும்வல்லார்

பயில்வது வானிடையே.

03.020:

மாதமர் மேனிய

னாகி வண்டொடு

போதமர் பொழிலணி

பூவ ணத்துறை

வேதனை விரவலர்

அரணம் மூன்றெய்த

நாதனை யடிதொழ

நன்மை யாகுமே.  1

வானணி மதிபுல்கு

சென்னி வண்டொடு

தேனணி பொழில்திருப்

பூவ ணத்துறை

ஆனநல் லருமறை

யங்கம் ஓதிய

ஞானனை யடிதொழ

நன்மை யாகுமே.  2

வெந்துய ருறுபிணி

வினைகள் தீர்வதோர்

புந்தியர் தொழுதெழு

பூவ ணத்துறை

அந்திவெண் பிறையினோ

டாறு சூடிய

நந்தியை யடிதொழ

நன்மை யாகுமே.  3

வாசநன் மலர்மலி

மார்பில் வெண்பொடிப்

பூசனைப் பொழில்திகழ்

பூவ ணத்துறை

ஈசனை மலர்புனைந்

தேத்து வார்வினை

நாசனை யடிதொழ

நன்மை யாகுமே.  4

குருந்தொடு மாதவி

கோங்கு மல்லிகை

பொருந்திய பொழில்திருப்

பூவ ணத்துறை

அருந்திறல் அவுணர்தம்

அரணம் மூன்றெய்த

பெருந்தகை யடிதொழப்

பீடை யில்லையே.  5

வெறிகமழ் புன்னைபொன்

ஞாழல் விம்மிய

பொறியர வணிபொழிற்

பூவ ணத்துறை

கிறிபடு முடையினன்

கேடில் கொள்கையன்

நறுமலர் அடிதொழ

நன்மை யாகுமே.  6

பறைமல்கு முழவொடு

பாடல் ஆடலன்

பொறைமல்கு பொழிலணி

பூவ ணத்துறை

மறைமல்கு பாடலன்

மாதோர் கூறினன்

அறைமல்கு கழல்தொழ

அல்லல் இல்லையே.  7

வரைதனை யெடுத்தவல்

லரக்கன் நீள்முடி

விரல்தனில் அடர்த்தவன்

வெள்ளை நீற்றினன்

பொருபுனல் புடையணி

பூவ ணந்தனைப்

பரவிய அடியவர்க்

கில்லை பாவமே.  8

நீர்மல்கு மலருறை

வானும் மாலுமாய்ச்

சீர்மல்கு திருந்தடி

சேர கிற்கிலர்

போர்மல்கு மழுவினன்

மேய பூவணம்

ஏர்மல்கு மலர்புனைந்

தேத்தல் இன்பமே.  9

மண்டைகொண் டுழிதரு

மதியில் தேரருங்

குண்டருங் குணமல

பேசுங் கோலத்தர்

வண்டமர் வளர்பொழில்

மல்கு பூவணங்

கண்டவர் அடிதொழு

தேத்தல் கன்மமே.  10

புண்ணியர் தொழுதெழு

பூவ ணத்துறை

அண்ணலை யடிதொழு

தந்தண் காழியுள்

நண்ணிய அருமறை

ஞான சம்பந்தன்

பண்ணிய தமிழ்சொலப்

பறையும் பாவமே.