Friday, May 26, 2023

Swetharanyeswarar Temple, Thiruvenkadu – Sambandar Hymns

Swetharanyeswarar Temple, Thiruvenkadu – Sambandar Hymns

02.048:

கண்காட்டு நுதலானுங்

கனல்காட்டுங் கையானும்

பெண்காட்டும் உருவானும்

பிறைகாட்டுஞ் சடையானும்

பண்காட்டும் இசையானும்

பயிர்காட்டும் புயலானும்

வெண்காட்டில் உறைவானும்

விடைகாட்டுங் கொடியானே.  1

பேயடையா பிரிவெய்தும்

பிள்ளையினோ டுள்ளநினை

வாயினவே வரம்பெறுவர்

ஐயுறவேண் டாவொன்றும்

வேயனதோ ளுமைபங்கன்

வெண்காட்டு முக்குளநீர்

தோய்வினையா ரவர்தம்மைத்

தோயாவாந் தீவினையே.  2

மண்ணொடுநீ ரனல்காலோ

டாகாயம் மதிஇரவி

எண்ணில்வரு மியமானன்

இகபரமு மெண்டிசையும்

பெண்ணினொடாண் பெருமையொடு

சிறுமையுமாம் பேராளன்

விண்ணவர்கோன் வழிபடவெண்

காடிடமா விரும்பினனே.  3

விடமுண்ட மிடற்றண்ணல்

வெண்காட்டின் தண்புறவின்

மடல்விண்ட முடத்தாழை

மலர்நிழலைக் குருகென்று

தடமண்டு துறைக்கெண்டை

தாமரையின் பூமறையக்

கடல்விண்ட கதிர்முத்த

நகைகாட்டுங் காட்சியதே.  4

வேலைமலி தண்கானல்

வெண்காட்டான் திருவடிக்கீழ்

மாலைமலி வண்சாந்தால்

வழிபடுநன் மறையவன்றன்

மேலடர்வெங் காலனுயிர்

விண்டபினை நமன்தூதர்

ஆலமிடற் றான்அடியார்

என்றடர அஞ்சுவரே.  5

தண்மதியும் வெய்யரவுந்

தாங்கினான் சடையினுடன்

ஒண்மதிய நுதலுமையோர்

கூறுகந்தான் உறைகோயில்

பண்மொழியால் அவன்நாமம்

பலவோதப் பசுங்கிள்ளை

வெண்முகில்சேர் கரும்பெணைமேல்

வீற்றிருக்கும் வெண்காடே.  6

சக்கரமாற் கீந்தானுஞ்

சலந்தரனைப் பிளந்தானும்

அக்கரைமே லசைத்தானும்

அடைந்தயிரா வதம்பணிய

மிக்கதனுக் கருள்சுரக்கும்

வெண்காடும் வினைதுரக்கும்

முக்குளம்நன் குடையானும்

முக்கணுடை இறையவனே.  7

பண்மொய்த்த இன்மொழியாள்

பயமெய்த மலையெடுத்த

உன்மத்தன் உரம்நெரித்தன்

றருள்செய்தான் உறைகோயில்

கண்மொய்த்த கருமஞ்ஞை

நடமாடக் கடல்முழங்க

விண்மொய்த்த பொழில்வரிவண்

டிசைமுரலும் வெண்காடே.  8

கள்ளார்செங் கமலத்தான்

கடல்கிடந்தான் எனஇவர்கள்

ஒள்ளாண்மை கொளற்கோடி

உயர்ந்தாழ்ந்தும் உணர்வரியான்

வெள்ளானை தவஞ்செய்யும்

மேதகுவெண் காட்டானென்(று)

உள்ளாடி உருகாதார்

உணர்வுடைமை உணரோமே.  9

போதியர்கள் பிண்டியர்கள்

மிண்டுமொழி பொருளென்னும்

பேதையர்கள் அவர்பிறிமின்

அறிவுடையீர் இதுகேண்மின்

வேதியர்கள் விரும்பியசீர்

வியன்திருவெண் காட்டானென்

றோதியவர் யாதுமொரு

தீதிலரென் றுணருமினே.  10

தண்பொழில்சூழ் சண்பையர்கோன்

தமிழ்ஞான சம்பந்தன்

விண்பொலிவெண் பிறைச்சென்னி

விகிர்தனுறை வெண்காட்டைப்

பண்பொலிசெந் தமிழ்மாலை

பாடியபத் திவைவல்லார்

மண்பொலிய வாழ்ந்தவர்போய்

வான்பொலியப் புகுவாரே.

02.061:

உண்டாய் நஞ்சை உமையோர்

பங்கா என்றுள்கித்

தொண்டாய்த் திரியும் அடியார்

தங்கள் துயரங்கள்

அண்டா வண்ணம் அறுப்பான்

எந்தை ஊர்போலும்

வெண்டா மரைமேற் கருவண்

டியாழ்செய் வெண்காடே.  1

நாதன் நம்மை ஆள்வான்

னென்று நவின்றேத்திப்

பாதம் பன்னால் பணியும்

அடியார் தங்கள்மேல்

ஏதந் தீர இருந்தான்

வாழும் ஊர்போலும்

வேதத் தொலியாற் கிளிசொல்

பயிலும் வெண்காடே.  2

தண்முத் தரும்பத் தடமூன்

றுடையான் றனையுன்னிக்

கண்முத் தரும்பக் கழற்சே

வடிகை தொழுவார்கள்

உண்முத் தரும்ப வுவகை

தருவான் ஊர்போலும்

வெண்முத் தருவிப் புனல்வந்

தலைக்கும் வெண்காடே.  3

நரையார் வந்து நாளுங்

குறுகி நணுகாமுன்

உரையால் வேறா வுள்கு

வார்கள் உள்ளத்தே

கரையா வண்ணங் கண்டான்

மேவும் ஊர்போலும்

விரையார் கமலத் தன்னம்

மருவும் வெண்காடே.  4

பிள்ளைப் பிறையும் புனலுஞ்

சூடும் பெம்மானென்

றுள்ளத் துள்ளித் தொழுவார்

தங்கள் உறுநோய்கள்

தள்ளிப் போக அருளுந்

தலைவன் ஊர்போலும்

வெள்ளைச் சுரிசங் குலவித்

திரியும் வெண்காடே.  5

ஒளிகொள் மேனி யுடையாய்

உம்ப ராளீயென்

றளிய ராகி அழுதுற்

றூறும் அடியார்கட்

கெளியான் அமரர்க் கரியான்

வாழும் ஊர்போலும்

வெளிய வுருவத் தானை

வணங்கும் வெண்காடே.  6

கோள்வித் தனைய கூற்றந்

தன்னைக் குறிப்பினால்

மாள்வித் தவனை மகிழ்ந்தங்

கேத்த மாணிக்காய்

ஆள்வித் தமரர் உலகம்

அளிப்பான் ஊர்போலும்

வேள்விப் புகையால் வானம்

இருள்கூர் வெண்காடே.  7

வளையார் முன்கை மலையாள்

வெருவ வரையூன்றி

முளையார் மதியஞ் சூடி

யென்று முப்போதும்

இளையா தேத்த இருந்தான்

எந்தை ஊர்போலும்

விளையார் கழனிப் பழனஞ்

சூழ்ந்த வெண்காடே.  8

கரியா னோடு கமல

மலரான் காணாமை

எரியாய் நிமிர்ந்த எங்கள்

பெருமான் என்பார்கட்

குரியான் அமரர்க் கரியான்

வாழும் ஊர்போலும்

விரியார் பொழிலின் வண்டு

பாடும் வெண்காடே.  9

டும் அடியார் பலருங்

கூடிப் பரிந்தேத்த

ஆடும் அரவம் அசைத்த

பெருமான் அறிவின்றி

மூடம் உடைய சமண்சாக்

கியர்கள் உணராத

வேடம் உடைய பெருமான்

பதியாம் வெண்காடே.  10

விடையார் கொடியான் மேவி

யுறையும் வெண்காட்டைக்

கடையார் மாடங் கலந்து

தோன்றுங் காழியான்

நடையா ரின்சொல் ஞானசம்

பந்தன் தமிழ்வல்லார்க்

கடையா வினைகள் அமர

லோகம் ஆள்வாரே.

03.015:

மந்திர மறையவை

வான வரொடும்

இந்திரன் வழிபட

நின்ற எம்மிறை

வெந்தவெண் ணீற்றர்வெண்

காடு மேவிய

அந்தமு முதலுடை

அடிக ளல்லரே.  1

படையுடை மழுவினர்

பாய்புலித் தோலின்

உடைவிரி கோவணம்

உகந்த கொள்கையர்

விடையுடைக் கொடியர்வெண்

காடு மேவிய

சடையிடைப் புனல்வைத்த

சதுர ரல்லரே.  2

பாலொடு நெய்தயிர்

பலவு மாடுவர்

தோலொடு நூலிழை

துதைந்த மார்பினர்

மேலவர் பரவுவெண்

காடு மேவிய

ஆலம தமர்ந்தஎம்

அடிக ளல்லரே.  3

ஞாழலுஞ் செருந்தியும்

நறுமலர்ப் புன்னையுந்

தாழைவெண் குருகயல்

தயங்கு கானலில்

வேழம துரித்தவெண்

காடு மேவிய

யாழின திசையுடை

இறைவ ரல்லரே.  4

பூதங்கள் பலவுடைப்

புனிதர் புண்ணியர்

ஏதங்கள் பலஇடர்

தீர்க்கும் எம்மிறை

வேதங்கள் முதல்வர்வெண்

காடு மேவிய

பாதங்கள் தொழநின்ற

பரம ரல்லரே.  5

மண்ணவர் விண்ணவர்

வணங்க வைகலும்

எண்ணிய தேவர்கள்

இறைஞ்சும் எம்மிறை

விண்ணமர் பொழில்கொள்வெண்

காடு மேவிய

அண்ணலை அடிதொழ

அல்ல லில்லையே.  6

நயந்தவர்க் கருள்பல

நல்கி இந்திரன்

கயந்திரம் வழிபட

நின்ற கண்ணுதல்

வியந்தவர் பரவுவெண்

காடு மேவிய

பயந்தரு மழுவுடைப்

பரம ரல்லரே.  7

மலையுடன் எடுத்தவல்

லரக்கன் நீள்முடி

தலையுடன் நெரித்தருள்

செய்த சங்கரர்

விலையுடை நீற்றர்வெண்

காடு மேவிய

அலையுடைப் புனல்வைத்த

அடிக ளல்லரே.  8

ஏடவிழ் நறுமலர்

அயனும் மாலுமாய்த்

தேடவுந் தெரிந்தவர்

தேர கிற்கிலார்

வேடம துடையவெண்

காடு மேவிய

ஆடலை யமர்ந்தஎம்

அடிக ளல்லரே.  9

போதியர் பிண்டியர்

பொருத்த மில்லிகள்

நீதிகள் சொல்லியும்

நினைய கிற்கிலார்

வேதியர் பரவுவெண்

காடு மேவிய

ஆதியை யடிதொழ

அல்ல லில்லையே.  10