Mahalingeswarar Temple,
Thiruvidaimarudur – Appar Hymns
04.035:
காடுடைச் சுடலை நீற்றர்
கையில்வெண் டலையர் தையல்
பாடுடைப் பூதஞ் சூழப்
பரமனார் மருத வைப்பிற்
தோடுடைக் கைதை யோடு
சூழ்கிடங் கதனைச் சூழ்ந்த
ஏடுடைக் கமல வேலி
இடைமரு திடங்கொண் டாரே. 1
முந்தையார் முந்தி யுள்ளார்
மூவர்க்கு முதல்வ ரானார்
சந்தியார் சந்தி யுள்ளார்
தவநெறி தரித்து நின்றார்
சிந்தையார் சிந்தை யுள்ளார்
சிவநெறி யனைத்து மானார்
எந்தையார் எம்பி ரானார்
இடைமரு திடங் கொண்டாரே. 2
காருடைக் கொன்றை மாலை
கதிர்மணி அரவி னோடு
நீருடைச் சடையுள் வைத்த
நீதியார் நீதி யாய
போருடை விடையொன் றேற
வல்லவர் பொன்னித் தென்பால்
ஏருடைக் கமல மோங்கும்
இடைமரு திடங் கொண்டாரே. 3
விண்ணினார் விண்ணின் மிக்கார்
வேதங்கள் நான்கும் அங்கம்
பண்ணினார் பண்ணின் மிக்க
பாடலார் பாவந் தீர்க்குங்
கண்ணினார் கண்ணின் மிக்க
நுதலினார் காமற் காய்ந்த
எண்ணினார் எண்ணின் மிக்கார்
இடைமரு திடங் கொண்டாரே. 4
வேதங்கள் நான்குங் கொண்டு
விண்ணவர் பரவி ஏத்தப்
பூதங்கள் பாடி யாட
லுடையவன் புனிதன் எந்தை
பாதங்கள் பரவி நின்ற
பத்தர்கள் தங்கள் மேலை
ஏதங்கள் தீர நின்றார்
இடைமரு திடங் கொண்டாரே. 5
பொறியர வரையி லார்த்துப்
பூதங்கள் பலவுஞ் சூழ
முறிதரு வன்னி கொன்றை
முதிர்சடை மூழ்க வைத்து
மறிதரு கங்கை தங்க
வைத்தவர் எத்தி சையும்
ஏறிதரு புனல்கொள் வேலி
இடைமரு திடங் கொண்டாரே. 6
படரொளி சடையி னுள்ளாற்
பாய்புனல் அரவி னோடு
சுடரொளி மதியம் வைத்துத்
தூவொளி தோன்றும் எந்தை
அடரொளி விடையொன் றேற
வல்லவர் அன்பர் தங்கள்
இடரவை கெடவு நின்றார்
இடைமரு திடங் கொண்டாரே. 7
கமழ்தரு சடையி னுள்ளாற்
கடும்புனல் அரவி னோடு
தவழ்தரு மதியம் வைத்துத்
தன்னடி பலரும் ஏத்த
மழுவது வலங்கை யேந்தி
மாதொரு பாக மாகி
எழில்தரு பொழில்கள் சூழ்ந்த
இடைமரு திடங் கொண்டாரே. 8
பொன்றிகழ் கொன்றை மாலை
புதுப்புனல் வன்னி மத்தம்
மின்றிகழ் சடையில் வைத்து
மேதகத் தோன்று கின்ற
அன்றவர் அளக்க லாகா
அனலெரி யாகி நீண்டார்
இன்றுட னுலக மேத்த
இடைமரு திடங் கொண்டாரே. 9
மலையுடன் விரவி நின்று
மதியிலா அரக்கன் நூக்கத்
தலையுட னடர்த்து மீண்டே
தலைவனாய் அருள்கள் நல்கிச்
சிலையுடை மலையை வாங்கித்
திரிபுர மூன்றும் எய்தார்
இலையுடைக் கமல வேலி
இடைமரு திடங் கொண்டாரே.
05.014:
பாச மொன்றில
ராய்ப்பல பத்தர்கள்
வாச நாண்மலர்
கொண்டடி வைகலும்
ஈச னெம்பெரு
மான்இடை மருதினிற்
பூச நாம்புகு
தும்புன லாடவே. 1
மறையின் நாண்மலர்
கொண்டடி வானவர்
முறையி னான்முனி
கள்வழி பாடுசெய்
இறைவன் எம்பெரு
மான்இடை மருதினில்
உறையும் ஈசனை
உள்குமென் உள்ளமே. 2
கொன்றை மாலையுங்
கூவிள மத்தமுஞ்
சென்று சேரத்
திகழ்சடை வைத்தவன்
என்று மெந்தை
பிரான்இடை மருதினை
நன்று கைதொழு
வார்வினை நாசமே. 3
இம்மை வானவர்
செல்வம் விளைத்திடும்
அம்மை யேற்பிற
வித்துயர் நீத்திடும்
எம்மை யாளும்
இடைமரு தன்கழல்
செம்மை யேதொழு
வார்வினை சிந்துமே. 4
வண்ட ணைந்தன
வன்னியுங் கொன்றையுங்
கொண்ட ணிந்த
சடைமுடிக் கூத்தனார்
எண்டி சைக்கும்
இடைமரு தாவென
விண்டு போயறும்
மேலை வினைகளே. 5
ஏற தேறும்
இடைமரு தீசனார்
கூறு வார்வினை
தீர்க்குங் குழகனார்
ஆறு செஞ்சடை
வைத்த அழகனார்க்
கூறி யூறி
உருகுமென் உள்ளமே. 6
விண்ணு ளாரும்
விரும்பப் படுபவர்
மண்ணு ளாரும்
மதிக்கப் படுபவர்
எண்ணி னார்பொழில்
சூழிடை மருதினை
நண்ணி னாரைநண்
ணாவினை நாசமே. 7
வெந்த வெண்பொடிப்
பூசும் விகிர்தனார்
கந்த மாலைகள்
சூடுங் கருத்தனார்
எந்தை யென்னிடை
மருதினில் ஈசனைச்
சிந்தை யால்நினை
வார்வினை தேயுமே. 8
வேத மோதும்
விரிசடை அண்ணலார்
பூதம் பாடநின்
றாடும் புனிதனார்
ஏதந் தீர்க்கும்
இடைமரு தாவென்று
பாத மேத்தப்
பறையுநம் பாவமே. 9
கனியி னுங்கட்டி
பட்ட கரும்பினும்
பனிம லர்க்குழற்
பாவைநல் லாரினுந்
தனிமு டிகவித்
தாளு மரசினும்
இனியன் றன்னடைந்
தார்க்கிடை மருதனே. 10
முற்றி லாமதி
சூடும் முதல்வனார்
ஒற்றி னார்மலை
யாலரக் கன்முடி
எற்றி னார்கொடி
யாரிடை மருதினைப்
பற்றி னாரைப்பற்
றாவினை பாவமே. 11
05.015:
பறையின் ஓசையும்
பாடலின் ஓசையும்
மறையின் ஓசையும்
வைகும் அயலெலாம்
இறைவன் எங்கள்
பிரானிடை மருதினில்
உறையும் ஈசனை
உள்குமென் உள்ளமே. 1
மனத்துள் மாயனை
மாசறு சோதியைப்
புனிற்றுப் பிள்ளைவெள்
ளைம்மதி சூடியை
எனக்குத் தாயையெம்
மானிடை மருதனை
நினைத்திட் டூறி
நிறைந்ததென் னுள்ளமே. 2
வண்ட ணைந்தன
வன்னியும் மத்தமுங்
கொண்ட ணிந்த
சடைமுடிக் கூத்தனை
எண்டி சைக்கும்
இடைமரு தாவென
விண்டு போயறும்
மேலை வினைகளே. 3
துணையி லாமையிற்
றூங்கிருட் பேய்களோ
டணைய லாவதெ
மக்கரி தேயெனா
இணையி லாஇடை
மாமரு தில்லெழு
பணையி லாகமஞ்
சொல்லுந்தன் பாங்கிக்கே. 4
மண்ணை யுண்டமால்
காணான் மலரடி
விண்ணை விண்டயன்
காணான் வியன்முடி
மொண்ணை மாமரு
தாவென்றென் மொய்குழல்
பண்ணை யாயமுந்
தானும் பயிலுமே. 5
மங்கை காணக்
கொடார்மண மாலையைக்
கங்கை காணக்
கொடார்முடிக் கண்ணியை
நங்கை மீர்இடை
மருதரிந் நங்கைக்கே
எங்கு வாங்கிக்
கொடுத்தார் இதழியே. 6
இப்பதிகத்தில் 7,8,9,10,11-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.
06.016:
சூலப் படையுடையார் தாமே போலுஞ்
சுடர்த்திங்கட் கண்ணி யுடையார் போலும்
மாலை மகிழ்ந்தொருபால் வைத்தார் போலும்
மந்திரமுந் தந்திரமு மானார் போலும்
வேலைக் கடல்நஞ்ச முண்டார் போலும்
மேல்வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும்
ஏலக் கமழ்குழலாள் பாகர் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே. 1
காரார் கமழ்கொன்றைக் கண்ணி போலுங்
காரானை ஈருரிவை போர்த்தார் போலும்
பாரார் பரவப் படுவார் போலும்
பத்துப் பல்லூழி பரந்தார் போலுஞ்
சீரால் வணங்கப் படுவார் போலுந்
திசையனைத்து மாய்மற்று மானார் போலும்
ஏரார் கமழ்குழலாள் பாகர் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே. 2
வேதங்கள் வேள்வி பயந்தார் போலும்
விண்ணுலகு மண்ணுலகு மானார் போலும்
பூதங்க ளாய புராணர் போலும்
புகழ வளரொளியாய் நின்றார் போலும்
பாதம் பரவப் படுவார் போலும்
பத்தர் களுக்கின்பம் பயந்தார் போலும்
ஏதங்க ளான கடிவார் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே. 3
திண்குணத்தார் தேவர் கணங்க ளேத்தித்
திசைவணங்கச் சேவடியை வைத்தார் போலும்
விண்குணத்தார் வேள்வி சிதைய நூறி
வியன்கொண்டல் மேற்செல் விகிர்தர் போலும்
பண்குணத்தார் பாடலோ டாட லோவாப்
பரங்குன்ற மேய பரமர் போலும்
எண்குணத்தார் எண்ணா யிரவர் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே. 4
ஊக முகிலுரிஞ்சு சோலை சூழ்ந்த
உயர்பொழி லண்ணாவி லுறைகின் றாரும்
பாகம் பணிமொழியாள் பாங்க ராகிப்
படுவெண் டலையிற் பலிகொள் வாரும்
மாகமடை மும்மதிலு மெய்தார் தாமு
மணிபொழில் சூழாரூர் உறைகின் றாரும்
ஏகம்ப மேயாரு மெல்லா மாவார்
இடைமருது மேவிய ஈச னாரே. 5
ஐயிரண்டும் ஆறொன்று மானார் போலும்
அறுமூன்றும் நான்மூன்று மானார் போலுஞ்
செய்வினைகள் நல்வினைக ளானார் போலுந்
திசையனைத்து மாய்நிறைந்த செல்வர் போலுங்
கொய்மலரங் கொன்றைச் சடையார் போலுங்
கூத்தாட வல்ல குழகர் போலும்
எய்யவந்த காமனையுங் காய்ந்தார் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே. 6
பிரியாத குணமுயிர்கட் கஞ்சோ டஞ்சாய்ப்
பிரிவுடைய குணம்பேசிற் பத்தோ டொன்றாய்
விரியாத குணமொருகால் நான்கே யென்பர்
விரிவிலாக் குணநாட்டத் தாறே யென்பர்
தெரிவாய குணமஞ்சுஞ் சமிதை யஞ்சும்
பதமஞ்சுங் கதியஞ்சுஞ் செப்பி னாரும்
எரியாய தாமரைமே லியங்கி னாரும்
இடைமருது மேவிய ஈச னாரே. 7
தோலிற் பொலிந்த வுடையார் போலுஞ்
சுடர்வா யரவசைத்த சோதி போலும்
ஆல மமுதாக வுண்டார் போலும்
அடியார்கட் காரமுத மானார் போலுங்
காலனையுங் காய்ந்த கழலார் போலுங்
கயிலாயந் தம்மிடமாகக் கொண்டார் போலும்
ஏலங் கமழ்குழலாள் பாகர் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே. 8
பைந்தளிர்க் கொன்றையந் தாரார் போலும்
படைக்கணாள் பாக முடையார் போலும்
அந்திவாய் வண்ணத் தழகர் போலும்
மணிநீல கண்ட முடையார் போலும்
வந்த வரவுஞ் செலவு மாகி
மாறாதென் னுள்ளத் திருந்தார் போலும்
எந்த மிடர்தீர்க்க வல்லார் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே. 9
கொன்றையங் கூவிள மாலை தன்னைக்
குளிர்சடைமேல் வைத்துகந்த கொள்கை யாரும்
நின்ற அனங்கனை நீறா நோக்கி
நெருப்புருவ மாய்நின்ற நிமல னாரும்
அன்றவ் வரக்கன் அலறி வீழ
அருவரையைக் காலா லழுத்தி னாரும்
என்று மிடுபிச்சை ஏற்றுண் பாரும்
இடைமருது மேவிய ஈச னாரே. 10
06.017:
ஆறு சடைக்கணிவர் அங்கைத் தீயர்
அழகர் படையுடையர் அம்பொற் றோள்மேல்
நீறு தடவந் திடப மேறி
நித்தம் பலிகொள்வர் மொய்த்த பூதங்
கூறுங் குணமுடையர் கோவ ணத்தர்
கோடால வேடத்தர் கொள்கை சொல்லின்
ஈறுந் நடுவு முதலு மாவார்
இடைமருது மேவி யிடங்கொண் டாரே. 1
மங்குல் மதிவைப்பர் வான நாடர்
மடமா னிடமுடையர் மாத ராளைப்
பங்கில் மிகவைப்பர் பால்போல் நீற்றர்
பளிக்கு வடம்புனைவர் பாவ நாசர்
சங்கு திரையுகளுஞ் சாய்க்கா டாள்வர்
சரிதை பலவுடையர் தன்மை சொல்லின்
எங்கும் பலிதிரிவர் என்னுள் நீங்கார்
இடைமருது மேவி யிடங் கொண்டாரே. 2
ஆல நிழலிருப்பர் ஆகா யத்தர்
அருவரையி னுச்சியர் ஆணர் பெண்ணர்
காலம் பலகழித்தார் கறைசேர் கண்டர்
கருத்துக்குச் சேயார்தாங் காணா தார்க்குக்
கோலம் பலவுடையர் கொல்லை யேற்றர்
கொடுமழுவர் கோழம்ப மேய ஈசர்
ஏல மணநாறும் ஈங்கோய் நீங்கார்
இடைமருது மேவி யிடங்கொண் டாரே. 3
தேசர் திறம்நினைவார் சிந்தை சேருஞ்
செல்வர் திருவாரூ ரென்றும் உள்ளார்
வாச மலரின்கண் மான்தோல் போர்ப்பர்
மருவுங் கரியுரியர் வஞ்சக் கள்வர்
நேசர் அடைந்தார்க் கடையா தார்க்கு
நிட்டுரவர் கட்டங்கர் நினைவார்க் கென்றும்
ஈசர் புனற்பொன்னித் தீர்த்தர் வாய்த்த
இடைமருது மேவி யிடங்கொண் டாரே. 4
கரப்பர் கரியமனக் கள்வர்க் குள்ளங்
கரவாதே தந்நினைய கிற்பார் பாவந்
துரப்பர் தொடுகடலின் நஞ்ச முண்பர்
தூய மறைமொழியர் தீயா லொட்டி
நிரப்பர் புரமூன்றும் நீறு செய்வர்
நீள்சடையர் பாய்விடைகொண் டெங்கும் ஐயம்
இரப்பர் எமையாள்வர் என்னுள் நீங்கார்
இடைமருது மேவி யிடங்கொண் டாரே. 5
கொடியா ரிடபத்தர் கூத்து மாடிக்
குளிர்கொன்றை மேல்வைப்பர் கோல மார்ந்த
பொடியாரு மேனியர் பூதிப் பையர்
புலித்தோலர் பொங்கரவர் பூண நூலர்
அடியார் குடியாவர் அந்த ணாளர்
ஆகுதியின் மந்திரத்தார் அமரர் போற்ற
இடியார் களிற்றுரியார் எவரும் போற்ற
இடைமருது மேவி யிடங்கொண் டாரே. 6
பச்சை நிறமுடையர் பாலர் சாலப்
பழையர் பிழையெலாம் நீக்கி யாள்வர்
கச்சைக் கதநாகம் பூண்ட தோளர்
கலனொன்று கையேந்தி இல்லந் தோறும்
பிச்சை கொளநுகர்வர் பெரியர் சாலப்
பிறங்கு சடைமுடியர் பேணுந் தொண்டர்
இச்சை மிகஅறிவர் என்று முள்ளார்
இடைமருது மேவி யிடங்கொண் டாரே. 7
காவார் சடைமுடியர் காரோ ணத்தர்
கயிலாய மன்னினார் பன்னு மின்சொற்
பாவார் பொருளாளர் வாளார் கண்ணி
பயிலுந் திருவுருவம் பாக மேயார்
பூவார் புனலணவு புன்கூர் வாழ்வர்
புரமூன்று மொள்ளழலாக் காயத் தொட்ட
ஏவார் சிலைமலையர் எங்குந் தாமே
இடைமருது மேவி யிடங்கொண் டாரே. 8
புரிந்தார் நடத்தின்கண் பூத நாதர்
பொழிலாரூர் புக்குறைவர் போந்து தம்மிற்
பிரிந்தா ரகல்வாய பேயுந் தாமும்
பிரியா ரொருநாளும் பேணு காட்டில்
எரிந்தா ரனலுகப்பர் ஏழிலோசை
எவ்விடத்துந் தாமேயென் றேத்து வார்பால்
இருந்தார் இமையவர்கள் போற்ற என்றும்
இடைமருது மேவி யிடங்கொண் டாரே. 9
விட்டிலங்கு மாமழுவர் வேலை நஞ்சர்
விடங்கர் விரிபுனல்சூழ் வெண்காட் டுள்ளார்
மட்டிலங்கு தார்மாலை மார்பில் நீற்றர்
மழபாடி யுள்ளுறைவர் மாகா ளத்தர்
சிட்டிலங்கு வல்லரக்கர் கோனை யன்று
செழுமுடியுந் தோளைந்நான் கடரக் காலால்
இட்டிரங்கி மற்றவனுக் கீந்தார் வென்றி
இடைமருது மேவி யிடங்கொண் டாரே. 10