Friday, September 17, 2021

Brahmapureeswarar Temple, Thirukkuvalai – Appar Hymns

Brahmapureeswarar Temple, Thirukkuvalai – Appar Hymns

05.056:

மைக்கொள் கண்ணுமை

பங்கினன் மான்மழுத்

தொக்க கையினன்

செய்யதோர் சோதியன்

கொக்க மர்பொழில்

சூழ்தரு கோளிலி

நக்க னைத்தொழ

நம்வினை நாசமே.  1

முத்தி னைமுத

லாகிய மூர்த்தியை

வித்தி னைவிளை

வாய விகிர்தனைக்

கொத்த லர்பொழில்

சூழ்தரு கோளிலி

அத்த னைத்தொழ

நீங்கும்நம் மல்லலே.  2

வெண்டி ரைப்பர

வைவிட முண்டதோர்

கண்ட னைக்கலந்

தார்தமக் கன்பனைக்

கொண்ட லம்பொழிற்

கோளிலி மேவிய

அண்ட னைத்தொழு

வார்க்கல்ல லில்லையே.  3

பலவும் வல்வினை

பாறும் பரிசினால்

உலவுங் கங்கையுந்

திங்களும் ஒண்சடை

குலவி னான்குளி

ரும்பொழிற் கோளிலி

நிலவி னான்றனை

நித்தல் நினைமினே.  4

அல்ல லாயின

தீரும் அழகிய

முல்லை வெண்முறு

வல்லுமை யஞ்சவே

கொல்லை யானை

யுரித்தவன் கோளிலிச்

செல்வன் சேவடி

சென்று தொழுமினே.  5

ஆவின் பால்கண்

டளவில் அருந்தவப்

பாலன் வேண்டலுஞ்

செல்லென்று பாற்கடல்

கூவி னான்குளி

ரும்பொழிற் கோளிலி

மேவி னானைத்

தொழவினை வீடுமே.  6

சீர்த்த நன்மனை

யாளுஞ் சிறுவரும்

ஆர்த்த சுற்றமும்

பற்றிலை யாதலாற்

கூத்த னாருறை

யுந்திருக் கோளிலி

ஏத்தி நீர்தொழு

மின்னிடர் தீருமே.  7

மால தாகி

மயங்கும் மனிதர்காள்

காலம் வந்து

கடைமுடி யாமுனங்

கோல வார்பொழிற்

கோளிலி மேவிய

நீல கண்டனை

நின்று நினைமினே.  8

கேடு மூடிக்

கிடந்துண்ணு நாடது

தேடி நீர்திரி

யாதே சிவகதி

கூட லாந்திருக்

கோளிலி ஈசனைப்

பாடு மின்னிர

வோடு பகலுமே.  9

மடுத்து மாமலை

யேந்தலுற் றான்றனை

அடர்த்துப் பின்னும்

இரங்கி யவற்கருள்

கொடுத்த வன்னுறை

கோளிலி யேதொழ

விடுத்து நீங்கிடும்

மேலை வினைகளே.

05.057:

முன்ன மேநினை

யாதொழிந் தேனுனை

இன்னம் நானுன

சேவடி யேத்திலேன்

செந்நெ லார்வயல்

சூழ்திருக் கோளிலி

மன்ன னேயடி

யேனை மறவலே.  1

விண்ணு ளார்தொழு

தேத்தும் விளக்கினை

மண்ணு ளார்வினை

தீர்க்கு மருந்தினைப்

பண்ணு ளார்பயி

லுந்திருக் கோளிலி

அண்ண லாரடி

யேதொழு துய்ம்மினே.  2

நாளும் நம்முடை

நாள்கள் அறிகிலோம்

ஆளும் நோய்களோ

ரைம்பதோ டாறெட்டும்

ஏழை மைப்பட்

டிருந்துநீர் நையாதே

கோளி லியரன்

பாதமே கூறுமே.  3

விழவி னோசை

ஒலியறாத் தண்பொழில்

பழகி னார்வினை

தீர்க்கும் பழம்பதி

அழல்கை யானம

ருந்திருக் கோளிலிக்

குழக னார்திருப்

பாதமே கூறுமே.  4

மூல மாகிய

மூவர்க்கு மூர்த்தியைக்

கால னாகிய

காலற்குங் காலனைக்

கோல மாம்பொழில்

சூழ்திருக் கோளிலிச்

சூல பாணிதன்

பாதந் தொழுமினே.  5

காற்ற னைக்கடல்

நஞ்சமு துண்டவெண்

ணீற்ற னைநிமிர்

புன்சடை யண்ணலை

ஆற்ற னையம

ருந்திருக் கோளிலி

ஏற்ற னாரடி

யேதொழு தேத்துமே.  6

வேத மாயவிண்

ணோர்கள் தலைவனை

ஓதி மன்னுயி

ரேத்து மொருவனைக்

கோதி வண்டறை

யுந்திருக் கோளிலி

வேத நாயகன்

பாதம் விரும்புமே.  7

நீதி யாற்றொழு

வார்கள் தலைவனை

வாதை யான

விடுக்கும் மணியினை

கோதி வண்டறை

யுந்திருக் கோளிலி

வேத நாயகன்

பாதம் விரும்புமே.  8

மாலும் நான்முக

னாலும் அறிவொணாப்

பாலின் மென்மொழி

யாளொரு பங்கனைக்

கோல மாம்பொழில்

சூழ்திருக் கோளிலி

நீல கண்டனை

நித்தல் நினைமினே.  9

அரக்க னாய

இலங்கையர் மன்னனை

நெருக்கி யம்முடி

பத்திறுத் தானவற்(கு)

இரக்க மாகிய

வன்றிருக் கோளிலி

அருத்தி யாயடி

யேதொழு துய்ம்மினே.