Tuesday, October 5, 2021

Lakshmipureeswarar Temple, Thirunindriyur – Sundarar Hymns

Lakshmipureeswarar Temple, Thirunindriyur – Sundarar Hymns

07.019:

அற்றவ னாரடி யார்தமக்

காயிழை பங்கினராம்

பற்றவ னாரெம் பராபர

ரென்று பலர்விரும்பும்

கொற்றவ னார்குறு காதவர்

ஊர்நெடு வெஞ்சரத்தால்

செற்றவ னார்க்கிட மாவது

நந்திரு நின்றியூரே.  1

வாசத்தி னார்மலர்க் கொன்றையுள்

ளார்வடி வார்ந்தநீறு

பூசத்தி னார்புக லிந்நகர்

போற்றுமெம் புண்ணியத்தார்

நேசத்தி னாலென்னை யாளுங்கொண்

டார்நெடு மாகடல்சூழ்

தேசத்தி னார்க்கிட மாவது

நந்திரு நின்றியூரே.  2

அங்கையின் மூவிலை வேலர்

அமரர் அடிபரவச்

சங்கையை நீங்க அருளித்

தடங்கடல் நஞ்சமுண்டார்

மங்கையோர் பாகர் மகிழ்ந்த

இடம்வள மல்குபுனற்

செங்கயல் பாயும் வயல்பொலி

யுந்திரு நின்றியூரே.  3

ஆறுகந் தாரங்கம் நான்மறை

யாரெங்கு மாகியடல்

ஏறுகந் தாரிசை ஏழுகந்

தார்முடிக் கங்கைதன்னை

வேறுகந் தார்விரி நூலுகந்

தார்பரி சாந்தமதா

நீறுகந் தாருறை யும்மிட

மாந்திரு நின்றியூரே.  4

வஞ்சங்கொண் டார்மனஞ் சேரகில்

லார்நறு நெய்தயிர்பால்

அஞ்சுங்கொண் டாடிய வேட்கையி

னாரதி கைப்பதியே

தஞ்சங்கொண் டார்தமக் கென்றும்

இருக்கை சரணடைந்தார்

நெஞ்சங்கொண் டார்க்கிட மாவது

நந்திரு நின்றியூரே.  5

ஆர்த்தவர் ஆடர வம்மரை

மேற்புலி ஈருரிவை

போர்த்தவர் ஆனையின் தோலுடல்

வெம்புலால் கையகலப்

பார்த்தவ ரின்னுயிர் பார்படைத்

தான்சிர மஞ்சிலொன்றைச்

சேர்த்தவ ருக்குறை யும்மிட

மாந்திரு நின்றியூரே  6

தலையிடை யார்பலி சென்றகந்

தோறுந் திரிந்தசெல்வர்

மலையுடை யாளொரு பாகம்வைத்

தார்கல் துதைந்தநன்னீர்

அலையுடை யார்சடை எட்டுஞ்

சுழல அருநடஞ்செய்

நிலையுடை யாருறை யும்மிட

மாந்திரு நின்றியூரே.  7

எட்டுகந் தார்திசை ஏழுகந்

தார்எழுத் தாறுமன்பர்

இட்டுகந் தார்மலர்ப் பூசையிச்

சிக்கும் இறைவர்முன்னாள்

பட்டுகும் பாரிடைக் காலனைக்

காய்ந்து பலியிரந்தூண்

சிட்டுகந் தார்க்கிட மாவது

நந்திரு நின்றியூரே.  8

காலமும் ஞாயிறு மாகிநின்

றார்கழல் பேணவல்லார்

சீலமுஞ் செய்கையுங் கண்டுகப்

பாரடி போற்றிசைப்ப

மாலொடு நான்முகன் இந்திரன்

மந்திரத் தால்வணங்க

நீலநஞ் சுண்டவ ருக்கிட

மாந்திரு நின்றியூரே.  9

வாயார் மனத்தால் நினைக்கு

மவருக் கருந்தவத்தில்

தூயார் சுடுபொடி யாடிய

மேனியர் வானிலென்றும்

மேயார் விடையுகந் தேறிய

வித்தகர் பேர்ந்தவர்க்குச்

சேயார் அடியார்க் கணியவர்

ஊர்திரு நின்றியூரே.  10

சேரும் புகழ்த்தொண்டர் செய்கை

அறாத்திரு நின்றியூரிற்

சீருஞ் சிவகதி யாயிருந்

தானைத் திருநாவலா

ரூரன் உரைத்த உறுதமிழ்

பத்தும்வல் லார்வினைபோய்ப்

பாரும் விசும்புந் தொழப்பர

மன்னடி கூடுவரே.  11

07.065:

திருவும் வண்மையுந் திண்டிறல் அரசுஞ்

சிலந்தி யார்செய்த செய்பணி கண்டு

மருவு கோச்செங்க ணான்றனக் களித்த

வார்த்தை கேட்டுநுன் மலரடி அடைந்தேன்

பெருகு பொன்னிவந் துந்துபன் மணியைப்

பிள்ளைப் பல்கணம் பண்ணையுள் நண்ணித்

தெருவுந் தெற்றியும் முற்றமும் பற்றித்

திரட்டுந் தென்றிரு நின்றியூ ரானே.  1

அணிகொள் ஆடையம் பூண்மணி மாலை

அமுது செய்தமு தம்பெறு சண்டி

இணைகொள் ஏழெழு நூறிரு பனுவல்

ஈன்ற வன்றிரு நாவினுக் கரையன்

கணைகொள் கண்ணப்பன் என்றிவர் பெற்ற

காத லின்னருள் ஆதரித் தடைந்தேன்

திணைகொள் செந்தமிழ் பைங்கிளி தெரியுஞ்

செல்வத் தென்றிரு நின்றியூ ரானே.  2

மொய்த்த சீர்முந்நூற் றறுபது வேலி

மூன்று நூறுவே தியரொடு நுனக்கு

ஒத்த பொன்மணிக் கலசங்க ளேந்தி

ஓங்கு நின்றியூர் என்றுனக் களிப்பப்

பத்தி செய்தவப் பரசுரா மற்குப்

பாதங் காட்டிய நீதிகண் டடைந்தேன்

சித்தர் வானவர் தானவர் வணங்குஞ்

செல்வத் தென்றிரு நின்றியூ ரானே.  3

இரவி நீள்சுடர் எழுவதன் முன்னம்

எழுந்து தன்முலைக் கலசங்க ளேந்திச்

சுரபி பால்சொரிந் தாட்டிநின் பாதந்

தொடர்ந்த வார்த்தை திடம்படக் கேட்டுப்

பரவி உள்கிவன் பாசத்தை அறுத்துப்

பரம வந்துநுன் பாதத்தை அடைந்தேன்

நிரவி நித்திலம் அத்தகு செம்பொன்

அளிக்குந் தென்றிரு நின்றியூ ரானே.  4

வந்தோர் இந்திரன் வழிபட மகிழ்ந்து

வான நாடுநீ ஆள்கென அருளிச்

சந்தி மூன்றிலுந் தாபரம் நிறுத்திச்

சகளி செய்திறைஞ் சகத்தியர் தமக்குச்

சிந்து மாமணி அணிதிருப் பொதியிற்

சேர்வு நல்கிய செல்வங்கண் டடைந்தேன்

செந்தண் மாமலர்த் திருமகள் மருவுஞ்

செல்வத் தென்றிரு நின்றியூ ரானே.  5

காது பொத்தரைக் கின்னரர் உழுவை

கடிக்கும் பன்னகம் பிடிப்பருஞ் சீயங்

கோதில் மாதவர் குழுவுடன் கேட்பக்

கோல ஆல்நிழற் கீழறம் பகர

ஏதஞ் செய்தவர் எய்திய இன்பம்

யானுங் கேட்டுநின் இணையடி அடைந்தேன்

நீதி வேதியர் நிறைபுகழ் உலகில்

நிலவு தென்றிரு நின்றியூ ரானே.  6

கோடு நான்குடைக் குஞ்சரங் குலுங்க

நலங்கொள் பாதம்நின் றேத்திய பொழுதே

பீடு விண்மிசைப் பெருமையும் பெற்ற

பெற்றி கேட்டுநின் பொற்கழல் அடைந்தேன்

பேடை மஞ்ஞையும் பிணைகளின் கன்றும்

பிள்ளைக் கிள்ளையும் எனப்பிறை நுதலார்

நீடு மாடங்கள் மாளிகை தோறும்

நிலவு தென்றிரு நின்றியூ ரானே.  7

இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று  8

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  9

இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  10