Sunday, October 10, 2021

Rathnagiriswarar Temple, Thirumarugal – Sambandar Hymns

Rathnagiriswarar Temple, Thirumarugal – Sambandar Hymns

01.006:

அங்கமும் வேதமும் ஓதுநாவர்

அந்தணர் நாளும் அடிபரவ

மங்குல் மதிதவழ் மாடவீதி

மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்

செங்கய லார்புனற் செல்வமல்கு

சீர் கொள்செங் காட்டங் குடியதனுள்

கங்குல் விளங்கெரி யேந்தியாடுங்

கணபதி யீச்சரங் காமுறவே.  1

நெய்தவழ் மூவெரி காவலோம்பும்

நேர்புரி நூன்மறை யாளரேத்த

மைதவழ் மாட மலிந்தவீதி

மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்

செய்தவ நான்மறை யோர்களேத்துஞ்

சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்

கைதவழ் கூரெரி யேந்தியாடுங்

கணபதி யீச்சரங் காமுறவே.  2

தோலொடு நூலிழை சேர்ந்தமார்பர்

தொகுமறை யோர்கள் வளர்த்தசெந்தீ

மால்புகை போய்விம்மு மாடவீதி

மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்

சேல்புல்கு தண்வயற் சோலைசூழ்ந்த

சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்

கால்புல்கு பைங்கழ லார்க்கஆடுங்

கணபதி யீச்சரங் காமுறவே.  3

நாமரு கேள்வியர் வேள்வியோவா

நான்மறை யோர்வழி பாடுசெய்ய

மாமரு வும்மணிக் கோயில்மேய

மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்

தேமரு பூம்பொழிற் சோலைசூழ்ந்த

சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்

காமரு சீர்மகிழ்ந் தெல்லியாடுங்

கணபதி யீச்சரங் காமுறவே.  4

பாடல் முழவும் விழவும்ஓவாப்

பன்மறை யோரவர் தாம்பரவ

மாட நெடுங்கொடி விண்தடவும்

மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்

சேடக மாமலர்ச் சோலைசூழ்ந்த

சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்

காடக மே1யிடமாக ஆடுங்

கணபதி யீச்சரங் காமுறவே.

காடயலே  5

புனையழ லோம்புகை அந்தணாளர்

பொன்னடி நாடொறும் போற்றிசைப்ப

மனைகெழு மாட மலிந்தவீதி

மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்

சினைகெழு தண்வயல் சோலைசூழ்ந்த

சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்

கனைவளர் கூரெரி ஏந்தியாடுங்

கணபதி யீச்சரங் காமுறவே.  6

இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  7

பூண்டங்கு மார்பின் இலங்கைவேந்தன்

பொன்னெடுந்தோள்வரை யாலடர்த்து

மாண்டங்கு நூன்மறையோர் பரவ

மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்

சேண்டங்கு மாமலர்ச் சோலைசூழ்ந்த

சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்

காண்டங்கு தோள்பெயர்த் தெல்லியாடுங்

கணபதி யீச்சரங் காமுறவே.  8

அந்தமும் ஆதியும் நான்முகனும்

அரவணை யானும் அறிவரிய

மந்திர வேதங்க ளோதுநாவர்

மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்

செந்தமி ழோர்கள் பரவியேத்துஞ்

சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்

கந்தம் அகிற்புகை யேகமழுங்

கணபதி யீச்சரங் காமுறவே.  9

இலைமரு தேயழ காகநாளு

மிடுதுவர்க் காயொடு சுக்குத்தின்னும்

நிலையமண் தேரரை நீங்கிநின்று2

நீதரல் லார்தொழு மாமருகல்

மலைமகள் தோள்புணர் வாயருளாய்

மாசில்செங் காட்டங் குடியதனுள்

கலைமல்கு தோலுடுத் தெல்லியாடுங்

கணபதி யீச்சரங் காமுறவே.

நீங்கிநின்ற,நீங்கநின்ற  10

நாலுங்குலைக்கமு கோங்குகாழி

ஞானசம் பந்தன் நலந்திகழும்

மாலின் மதிதவழ் மாடமோங்கும்

மருகலின் மற்றதன் மேல்மொழிந்த

சேலுங் கயலுந் திளைத்தகண்ணார்

சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்

சூலம்வல் லான்கழ லேத்துபாடல்

சொல்லவல் லார்வினை யில்லையாமே.

02.018:

சடையா யெனுமால்

சரண்நீ யெனுமால்

விடையா யெனுமால்

வெருவா விழுமால்

மடையார் குவளை

மலரும் மருகல்

உடையாய் தகுமோ

இவள்உள் மெலிவே.  1

சிந்தா யெனுமால்

சிவனே யெனுமால்

முந்தா யெனுமால்

முதல்வா எனுமால்

கொந்தார் குவளை

குலவும் மருகல்

எந்தாய் தகுமோ

இவள்ஏ சறவே.  2

அறையார் கழலும்

மழல்வா யரவும்

பிறையார் சடையும்

முடையாய் பெரிய

மறையார் மருகல்

மகிழ்வா யிவளை

இறையார் வளைகொண்

டெழில்வவ் வினையே.  3

ஒலிநீர் சடையிற்

கரந்தா யுலகம்

பலிநீ திரிவாய்

பழியில் புகழாய்

மலிநீர் மருகல்

மகிழ்வா யிவளை

மெலிநீர் மையளாக்

கவும்வேண் டினையே.  4

துணிநீ லவண்ணம்

முகில்தோன் றியன்ன

மணிநீ லகண்டம்

உடையாய் மருகல்

கணிநீ லவண்டார்

குழலாள் இவள்தன்

அணிநீ லவொண்கண்

அயர்வாக் கினையே.  5

பலரும் பரவப்

படுவாய் சடைமேல்

மலரும் பிறையொன்

றுடையாய் மருகல்

புலருந் தனையுந்

துயிலாள் புடைபோந்

தலரும் படுமோ

அடியா ளிவளே.  6

வழுவாள் பெருமான்

கழல்வாழ் கவெனா

எழுவாள் நினைவாள்

இரவும் பகலும்

மழுவா ளுடையாய்

மருகற் பெருமான்

தொழுவா ளிவளைத்

துயராக் கினையே.  7

இலங்கைக் கிறைவன்

விலங்க லெடுப்பத்

துலங்கவ் விரலூன்

றலுந்தோன் றலனாய்

வலங்கொள் மதிள்சூழ்

மருகற் பெருமான்

அலங்கல் லிவளை

அலராக் கினையே.  8

எரியார் சடையும்

மடியும் மிருவர்

தெரியா ததொர்தீத்

திரளா யவனே

மரியார் பிரியா

மருகற் பெருமான்

அரியாள் இவளை

அயர்வாக் கினையே.  9

அறிவில் சமணும்

மலர்சாக் கியரும்

நெறியல் லனசெய்

தனர்நின் றுழல்வார்

மறியேந் துகையாய்

மருகற் பெருமான்

நெறியார் குழலி

நிறைநீக் கினையே.  10

வயஞா னம்வல்லார்

மருகற் பெருமான்

உயர்ஞா னமுணர்ந்

தடியுள் குதலால்

இயன்ஞா னசம்பந்

தனபா டல்வல்லார்

வியன்ஞா லமெல்லாம்

விளங்கும் புகழே.