Monday, October 4, 2021

Thirumayanam Brahmapureeswarar Temple, Thirukkadaiyur – Appar Hymns

Thirumayanam Brahmapureeswarar Temple, Thirukkadaiyur – Appar Hymns

05.038:

குழைகொள் காதினர்

கோவண ஆடையர்

உழையர் தாங்கட

வூரின் மயானத்தார்

பழைய தம்மடி

யார்செயும் பாவமும்

பிழையுந் தீர்ப்பர்

பெருமா னடிகளே.  1

உன்னி வானவர்

ஓதிய சிந்தையிற்

கன்னல் தேன்கட

வூரின் மயானத்தார்

தன்னை நோக்கித்

தொழுதெழு வார்க்கெலாம்

பின்னை என்னார்

பெருமா னடிகளே.  2

சூல மேந்துவர்

தோலுடை ஆடையர்

ஆல முண்டமு

தேமிகத் தேக்குவர்

கால காலர்

கடவூர் மயானத்தார்

மாலை மார்பர்

பெருமா னடிகளே.  3

இறைவ னாரிமை

யோர்தொழு பைங்கழல்

மறவ னார்கட

வூரின் மயானத்தார்

அறவ னாரடி

யாரடி யார்தங்கள்

பிறவி தீர்ப்பர்

பெருமா னடிகளே.  4

கத்து காளி

கதந்தணி வித்தவர்

மத்தர் தாங்கட

வூரின் மயானத்தார்

ஒத்தொவ் வாதன

செய்துழல் வாரொரு

பித்தர் காணும்

பெருமா னடிகளே.  5

எரிகொள் மேனி

இளம்பிறை வைத்தவர்

கரியர் தாங்கட

வூரின் மயானத்தார்

அரியர் அண்டத்து

ளோரயன் மாலுக்கும்

பெரியர் காணும்

பெருமா னடிகளே.  6

அணங்கு பாகத்தர்

ஆரண நான்மறை

கணங்கள் சேர்கட

வூரின் மயானத்தார்

வணங்கு வாரிடர்

தீர்ப்பர் மயக்குறும்

பிணங்கொள் காடர்

பெருமா னடிகளே.  7

அரவு கையினர்

ஆதி புராணனார்

மரவு சேர்கட

வூரின் மயானத்தார்

பரவு வாரிடர்

தீர்ப்பர் பணிகொள்வர்

பிரமன் மாற்கும்

பெருமா னடிகளே.  8

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  9

இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.